Wednesday 29 April 2009

தனி ஈழம் கேட்பது எப்படி தேச விரோதம்?:

தமிழ் ஈழம் வேண்டும் என கேட்பது எப்படி தேச விரோதச் செயலாகும் என்று காங்கிரசாருக்கு ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில், தனி ஈழம் அமைய வேண்டும் என்று நான் தெரிவித்த கருத்து, தேச விரோதமானது என்றும், பொறுப்பற்றது என்றும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன். சுதந்திர போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் செயலை நான் ஆதரிக்கவில்லை.

இனப்படுகொலை செய்யப்படுவதைத் தான் நான் கண்டிக்கிறேன். இலங்கையில், நடைபெறும் போரால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் வற்புறுத்தியுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அர்த்தமில்லாமல் நடைபெறும் இந்த போரால், அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.

இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்ற எல்லையோடு நிற்காமல், இலங்கைத் தமிழர்களின் நியாயமான பிரச்னைகளை புரிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசின் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, இலங்கைத் தமிழர்கள் அதிகமாக உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து எல்லைக்கோடு அமைத்து, அவர்களுக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி உரிய அதிகாரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை விவகாரத்தில், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தெரிவித்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்யவில்லை. இதுபோன்ற நிலையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தான் ஒரே தீர்வாக இருக்கும். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், நான் தெரிவித்த கருத்து எப்படி தேச விரோத கருத்தாக இருக்கும்? எந்த இந்திய சட்டத்தை நான் மீறிவிட்டேன்? இந்தியாவில் தனி நாடு அமைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.

தேசப்பற்று குறித்து, எனக்கு கபில் சிபல் பாடம் நடத்த வேண்டியதில்லை. இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தீர, அந்நாட்டில், தனி ஈழம் அமைய வேண்டும் என்று தான் கூறினேன். இது எப்படி, இந்தியாவிற்குள் தேச விரோத கருத்தாக இருக்க முடியும்?’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment